22 September 2015

I-ஆராய்ச்சி கட்டுரைகளை எவ்வாறு படிப்பது, I How to Read Research Papers

பி.எச்.டி சேர்ந்த புதிதில், ஆராய்ச்சி கட்டுரையின் தலைப்பில் ஆரம்பித்து கடைசி பக்கம் வரை ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை என்ற விகித்தில் படித்ததுண்டு. சில கட்டுரைகளை மேலோட்டமாகப் படித்து தேவையில்லாதவற்றை ஒதுக்கத் தெரியாமல், ஒரு நாள் செலவிட்டு படித்துவிட்டு இதனை ஏன் படித்தேன் என்ற கேள்வியும் எழுவதுண்டு. இவ்வலைப்பதிவில், ஆராய்ச்சி கட்டுரைகளை குறைந்த நேரத்தில், ஆராய்ச்சிக்குத் தேவையான அறிவியலை, அதே நேரத்தில் முழுமையாக எவ்வாறு படிப்பது என்பதைக் கூறியுள்ளேன்.
ஆராய்ச்சி கட்டுரைகள், அறிவியல் புத்தகம் படிப்பது, நாளிதழில் அறிவியல் செய்திகளை படிப்பது என்பதிலிருந்து வேறுபட்டது. பெற்றோர்களாக இருப்பது மற்றும் குழந்தை வளர்ப்பு என்பவை அனைவரும் கடந்து வரும் பாதை எனினும் இதில் வெளிவந்துள்ள ஆய்வேடுகளைப் படித்து முழுமையாகப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும்.
ஆராய்ச்சி கட்டுரைகளை படிப்பதற்கு முன், அதன் ஆசிரியர்கள் யார், அவர்களின் பல்கலைக்கழகம்/ நிறுவனம், ஆய்விதழின் பெயர் மற்றும் தரம் (impact factor) ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆய்வேடுகளின் வெவ்வேறு துணை தலைப்பு/பிரிவுகளில் (subheadings/sections) எவ்விதமான தகவல்கள் இருக்கும் என்பதைத் முதலில் தெரிந்து கொள்ளும் போது இதனை எளிதாகப் படிக்கலாம். எனவே, இவைகளை பற்றி சுருக்கமாக கூறிவிட்டு பிறகு எவ்வாறு படிக்கலாம் என்பதைக் கூறுகிறேன்.
தலைப்பு
ஆராய்ச்சி கட்டுரையின் தலைப்பு மிக எளிதாகவும், சுருக்கமாகவும் மற்றும் ஆராய்ச்சியாளர்களைக் கவரும் வகையில் இருக்கும். இது கட்டுரையின் அனைத்துப் பக்கங்களின் உள்ள அறிவியல் கருத்துகளின் சாரம்சங்களை பத்திலிருந்து பன்னிரண்டு வார்த்தைகளில் உள்ளடக்கும். கூகுள் எந்திரம் நீங்கள் என்ன வார்த்தைகளைத் தலைப்பில் கொடுத்துள்ளீர்கள் என்பதை பொறுத்து தனது தேடல் முடிவுகளைத் தேடுபவர்களுக்கு தரும். ஆராய்ச்சி அனைவருக்கும் எளிதில் தெரிய வேண்டும் என்ற கோணத்தில் ஆய்வு தலைப்பு அமைக்கப்பட்டிருக்கும். 
ஆய்வு சுருக்கம்
உங்கள் ஆய்வுக் கட்டுரை படிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது ஆய்வு சுருக்கத்தை வைத்து நிர்ணயக்கப்படும். இதில் ஆய்வுக்கான பின்புலம் (10%), தேவை மற்றும் நோக்கம் (20%), செயல் முறை (10%), ஆராய்ச்சியின் முக்கியமான விளைவு (40%) மற்றும் முடிவு (20%) ஆகியவை 100-200 வார்த்தைகளில் இடம் பெற்றிருக்கும். வாசிப்பவர்களுக்கு ஆராய்ச்சி எதற்கு, எப்படி, மற்றும் முடிவு என்ன என்பதை விளக்குவதாக இருக்கும். எழுதும் ஆசிரியர் பலமுறை எழுதிய பேப்பரை படித்து விட்டு, கடைசியாக ரெத்தின சுருக்கமாக ஆய்வு சுருக்கத்தை எழுதுவார்.
முன்னுரை
எந்தப் பிரச்சனையை மையப்படுத்தி ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது என்பதை முன்னுரை விளக்கும். முன்னுரையை மூன்று பத்திகளாக பிரித்தோம் எனில், முதல் பத்தி போதுமான ஆராய்ச்சி பின்புலம் (research background), கடந்த கால ஆய்வு முடிவுகளின் மறு ஆய்வு (review), மற்றும் குறிப்பிட்ட புலத்தில் என்ன பிரச்சனை (what is the problem/ research question) என்பவைகளை தெளிவாக கூறும். இரண்டாம் பத்தி ஏன் இந்த ஆய்வு செய்யப்படுகிறது (Reason for doing this work), ஆய்வின் முக்கியத்துவம் (Important of this research), பிரச்சனைக்கான தீர்வு எவ்வாறு பார்க்கப்படுகிறது (How do you address the problem) மற்றும் எவ்விதமான செய்முறை & பண்பறிதல் (Experimental & Characterization) செய்யப்பட்டது என்பதைக் கூறும். ஆய்வுக்கான நோக்கம் வரையறுக்கப்பட்டு முன்னுரையின் இறுதியில் அமைந்திருக்கும்.
செய்முறை
ஆராய்ச்சிக்கான செய்முறை ஆசிரியர் செய்யப்பட்ட வரிசையில் முறைப்படுத்தப் பட்டிருக்கும். புதிய செய்முறை எனில், எந்த இடர்பாடும் இல்லாமல் மீண்டும் பயன்படும் வகையில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கும். வழக்கமான செயல்முறை எனில் மேற்கோள் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆய்வு முடிவுகள் மற்றும் விவாதம்
ஆய்வு முடிவுகளில், பண்பறி சோதனையில் கிடைத்த அனைத்து முடிவுகளையும் விளக்காமல் அதே நேரத்தில் முடிவுகள் என்ன என்பதைத் தெளிவாக நிகழ்காலத்தில் வரிசைப்படுத்தபட்டிருக்கும். விவாதத்தில், ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் விவாதத்தின் அடிப்படையில் ஆசிரியரின் அறிவியல் கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும். கண்டறியப்பட்ட முக்கியமான முடிவுகள் விவாதத்தின் ஆரம்பத்தில் கூறப்பட்டிருக்கும். விவாதத்தின் நடுவில், ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகள் (result) பொருள் விளக்கம் (interpretation), மற்ற ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகளுடன் தொடர்பு படுத்துதல் (comparison), எதிர்பார்க்காத ஆராய்ச்சி முடிவுகள் (unexpected results), குறைகள் (limitations) மற்றும் குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதை பற்றிய ஆசிரியர் கருத்து (how could be improved) ஆகியவை இடம் பெற்றிருக்கும். விவாதத்தின் இறுதியில், முக்கியமான முடிவுகள் (important results), பயன்பாடுகள் மற்றும் செயற்படுத்துதல் (application and implementation), எதிர்காலத்திட்டம் (suggestion for future research) போன்றவை இடம் பெற்றிருக்கும்.
முடிவுரை
ஆசிரியரின் ஆராய்ச்சி கேள்வி மற்றும் அனுமானங்களுக்கான பதில்கள் முடிவுரையில் அமைந்திருக்கும். மேலும் ஆராய்ச்சியின் முக்கிய மற்றும் மேன்மையான முடிவுகள், ஆசிரியர் என்ன நிரூபித்துள்ளார், என்பவை இதில் அடங்கும். கட்டுரையில் இல்லாத புதுமையான செய்திகள் இதில் இடம் பெறாது.
அட்டவணை மற்றும் படங்கள்
ஆய்வு சுருக்கத்திற்கு பிறகு அனைவரும் பார்க்க விழைவது அட்டவணை மற்றும் படங்கள். எனவே, இவைத் தனித் தன்மையுடன் முழு ஆராய்ச்சியின் நோக்கம் எளிதில் விளங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். படங்கள், ஆராய்ச்சி முடிவிற்கு தகுந்தாற்ப் போல் line graph, flow chart, bar graph, scatter plots ஆக இருக்கும்.  
ஆய்வுகட்டுரையை தயார் செய்யும் போது கீழ்கண்ட வரிசையில் தயாரிக்கத் தொடங்கினால் சிறப்பாக அமையும். 1. அட்டவணை மற்றும் படங்கள், 2. பண்பறிதலின் முடிவுகள், 3. செய்முறை, 4. முன்னுரை, 5. விவாதம், 6. ஆய்வு சுருக்கம் மற்றும் 7. முடிவுரை.

தொடரும்…

05 September 2015

II வெற்றிகரமான பி.எச்.டி க்கு 10 வழிகள் (தொடர்ச்சி). II 10 Tips for Successful PhD (contd)

6. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்
உறவினர்களிடம் என்ன படிக்கிறான் என்று சொல்ல தெரியாமல் என்னமோ படிக்கிறான் என சொல்லும் பெற்றோர்கள், பிரச்சனைகளை ஆய்வுக்காக தேடி எடுத்து அதற்கு தீர்வு காண விழைபவனுக்கு இன்னும் படிக்கிறாய எனும் நண்பன் மற்றும் சில உறவுகள் என வரிசை நீளும். நெடுஞ்சாலையில் இடதுபுற சாலையில் வலதுபுறம் வேகமாக செல்ல வேண்டும் பி.எச்.டி பயணத்தில். வெளி உலகத்திற்கு நீங்கள் இதுவரை இல்லாத புதிய விஷயங்களை சொல்ல வேண்டும் என தெரிந்தாலும், இதற்கான அடுக்குகளில் ஒன்றுமே செய்ய இயலாத தளத்தில் இருப்பீர்கள். பல ஞாயிறுகள் மற்றவர்கள் சொல்லித்தான் தெரியும். பல நேரங்களில் உடனடியாக செய்வதற்கு ஏதும் இல்லை எனினும் வேலைக்கான நீண்ட பட்டியல் சராசரி வாழ்க்கையை வாழ விடாது. முடிந்த வரை சொல்லி விடுங்கள். எதிர்பார்க்காதீர்கள் ஒரு வேலை புரிந்து கொள்ளவில்லையெனில். ஆனால், பணிசுமையை புரிந்து கொண்ட சக ஆராய்ச்சியாளர்கள், மற்றும் துறை நண்பர்களின் நட்பை வளர்த்துகொள்ள சலித்துகொள்ளாதீர்கள்.    
7. உங்கள் ஆய்வறிக்கை புனித நூல் அல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள்
இணையத்தில் ஒரு சொடுக்கில் தேடல் முடிவுறவில்லையெனில் அந்த தேடலை மறந்து வேறு வேலைகளில் தீவிரமடையும் அளவிற்கு மனிதனை வாழ்க்கை துரத்துகிறது. இது தகவல் காலம் எனினும் தகவலைச் சுருங்கச் சொல்லி சொல்லும் விஷயத்தை தெளிவு படுத்த வேண்டும். இல்லையெனில் கணினியின் சுண்டெலி சக்கரம் வேகமாக சுற்றும், அடுத்த பக்கத்தை பார்க்க. எனவே, ஆய்வறிக்கையை மிக தெளிவாகவும், சுருக்கமாகவும் தயார் செய்யுங்கள்.
உங்கள் ஆய்வு சாதாரண டீ தயார் செய்வதை பற்றி எனில், அதற்கான ஆய்வு முடிவை மட்டும் விவாதியுங்கள். காபி மற்றும் கீரின் டீ பற்றிய ஆய்வை வேறு ஒருவர் செய்யட்டும், விட்டுவிடுங்கள். டீ பற்றிய கருத்தியலை (theory) விவாதிக்க தேவையில்லை, உங்கள் நோக்கம் செய்முறை எனில். கருப்புசாயம் (black tea) தயார் செய்து சர்க்கரையை அதில் கலப்பதை விட, கொதிக்கும் நீரில் சர்க்கரையை கரைத்து பின்னர் டீ தூள் கலந்து கருப்புசாயம் தயார் செய்யலாம் என உங்கள் முடிவை சொல்லி விடுங்கள். அல்லது இன்னும் சுருக்கமாக, சர்க்கரை கருப்புசாயத்தை விட தண்ணீரில் வேகமாக கரையும் என சொல்லலாம். மூக்கை தொடவேண்டுமெனில் நேரடியாக தொட்டுவிடுங்கள். இவை உங்கள் கால விரயத்தை குறைக்கும். மேலும், உங்கள் பி.எச்.டி ஆய்வறிக்கையை முழுமையாக உங்களைத்தவிர வேறு யாரும் படிப்பதற்கு நேரமில்லை என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.  
8. உங்களுக்கான ரசிகர்களை உருவாக்குங்கள்
பி. எச்.டி யில் ஆய்வு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு எழுதும் திறனும் முக்கியம். எழுத்து உங்கள் உண்மையை அடுத்தவர்கள் மனம் ஏற்கும்படி (Convincing ability) செய்ய வேண்டும். அதே நேரத்தில், அறிவியலில் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதை மனதில் பதியுங்கள். எழுத்து உங்கள் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். இது, உங்கள் ஆராய்ச்சிக்கு தேவையான நிதியை பெருக்க, மின் அஞ்சல் எழுதி எதிர்பார்த்தை நிறைவேற்ற, ஆராய்ச்சி ஏடுகளின் மேற்கோள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என அனைத்திற்கும் உதவும்.
12 மணிக்கு மேல் தொலைகாட்சியை பார்க்க முற்பட்டால் வரும் சோரியாஸிஸ் நிகழ்ச்சி போல எழுத்தின் மூலம் வெறுப்பேற்றாதீர்கள். மேலும் எங்கள் மருந்து எய்ட்ஸை குணப்படுத்தும் என ஆராய்ச்சி முடிவுகளை மிகைபடுத்தாதீர்கள் உண்மைக்கு புறம்பாக. ஆய்வேடுகளசெய்வினையில் வாக்கியங்களை அமைப்பது, நிகழ்காலத்தில் முடிவுகளை சொல்வது, 25 வார்த்தைகளுக்கு மிகாமல் வாக்கியங்களை கட்டுபடுத்துவது என அனைத்திலும் கவனமாக இருங்கள்.
9. உணர்ச்சி வசப்படுவதை கட்டுப்படுத்துங்கள்
பி. எச்.டி காலத்தில் உணர்ச்சி வசப்பட்டால் 100 சதவீத பாதிப்பு உங்களுக்கு மட்டுமே, உங்கள் வழிகாட்டிக்கோ, துறைக்கோ மற்றும் பல்கலைகழகத்திற்கோ அல்ல. ஏமாற்றம், வெறுப்புணர்வு, மனமுறிவு, கோபம் ஆகிய தளங்களை லாவகமாக கையால பழகிக்கொள்ளுங்கள். இந்நேரங்களில் தூங்கிவிடுங்கள். இவ்வுலகத்தில் பிரச்சனைகள் என்று ஏதும் இல்லை. அனைத்தும் சூழ்நிலைகளே, காலத்தை கடக்க, வெல்ல பயிற்சி எடுங்கள். பின் நாளில் வேலைக்காக அனுப்பும் 20-30 விண்ணப்பங்களுக்கு, ஒரே ஒர் இடத்திலிருந்து வரும் நேர்முகத் தேர்வு அழைப்பு வேலைவாய்ப்பு நெருக்கடியில் நிம்மதியை தரும். யாரும் உங்கள் தலையை எடுக்க போவதில்லை என நம்புங்கள்.
ஆய்வேடு நிராகரிக்கப்பட்டது, சோதனை முடிவில் ஏமாற்றம், பண்பறிவதில் கால தாமதம், வழிக்காட்டியுடன் ஒத்துபோகாத நிலை என எந்நிலை வந்தாலும் தன் நிலை குலைய வேண்டாம். இந்த சூழ்நிலைகளை ஏற்படுத்தியவர்களும் மேற்குறிய தளங்களை கடந்து வந்தவர்களே. கோபத்தில் மின்னஞ்சல் மற்றும் பதில் அனுப்புதலை தவிருங்கள்.
இதைத் தவிர, இந்தியாவில் சில இடங்களில் ஆராய்ச்சி மாணவர்களை கீழ்தரமாக நடத்துவதினாலும் ஏற்படும் மன உளைச்சலை எதிர்கொள்ளுங்கள். என்ன செய்வது, பிறப்பென்ற சம்பவம் இந்தியாவில் நடந்துவிட்டது.
10. வீட்டிற்கு வெளியே விளையாடுங்கள்
நான் இங்கு கூற விழைவது, பல்கலைகழக ஊழியர்கள் மற்றும் பி.எச்.டி மாணவர்களுக்கான உறவு முறைகள். இதை எழுதும் போது பி.எச்.டி மாணவி தனது வழிகாட்டியின் மீது கூறிய மூன்றாம் பால் உறவுகள் பற்றிய சமிபத்திய நிகழ்வு நினைவில் வந்தோடுகிறது. இதில் உண்மை நிலை மாணவர்க்கும் ஆசிரியருக்கும் மட்டுமே தெரிந்தது. எனினும் தேவையில்லாத ஒத்திசைவை, இணக்கத்தை உங்கள் வழிகாட்டியுடனோ அல்லது பல்கலைகழக ஊழியர்களுடனோ ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்களுக்கு ஒழுங்கு மற்றும் ஒழுங்கு முறையற்ற என இரண்டு செயல்களிலும் ஈடுபட அதிகாரமும் வலிமையும் உள்ளது. ஆனால், இம்மாதிரியான உறவுகளில் மாணவர்களுக்கு நாசுக்காக சொல்லி விலகுவதற்கும் கூட சுதந்திரம் உண்டா என்பது கேள்விகுறியே. உங்களுடைய உறவு முறை அப்பழுக்கற்றது எனினும், இந்த இணக்கம் நீங்கள் அடைந்த வெற்றியெல்லாம் பொய்யாக்கி விடும். உங்கள் நண்பர்களின் தேநீர் நேரத்தில் நீங்கள் தான் நொறுக்கு தீனி. மற்றவர்களின் காலை பிடித்து வாழ்வதற்கு சாகலாம் என்பார்கள் உங்கள் காதுபட. இம்மாதிரியான உறவில் சில நன்மையை  நீங்கள் அடைந்திருந்தாலும் இறுதியில் இவ்விணக்கம் துன்பத்தையே ஏற்படுத்தும்.
இறுதியில் நல்ல வெகுமதியை தரும் எந்த கடினமான உழைப்பும் மகிழ்ந்திருக்க கூடிய காலமே. பிரச்சனைகளை தேடி அலைந்து ஆராய்ச்சி செய்யும் போது, தேவையற்ற பிரச்சனைகளில் நேரத்தை தொலைக்க மனமில்லாதவற்கு 10 வழிகளும் பயன்தரும் என நம்புகிறேன்.