15 August 2017

புதிய பாடத் திட்டத்தில் அறிவுப் பெட்டியில் எவ்வாறு பாடம் நடத்த வேண்டும் என விளக்கம் கொடுங்கள்

2007 ம் வருடத்திற்குப் பிறகு தற்போது பள்ளி கல்வித் துறையினால் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் NEET மற்றும் IIT போன்ற பொது நுழைவுத் தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் அமையப் பெற வேண்டும் என்பது அனைவரின் நோக்கமாக இருக்கும். இத்தேர்வுகள் தேவையா () தேவை இல்லையா என்பது விவாதத்திற்கு உட்பட்டது எனினும்போட்டி நிறைந்த கூட்டத்தில் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுக்க இத்தேர்வுகளை அரசு  கருவியாக பயன்படுத்துகி  றது என்பது திண்ணம். சமீபத்தில் பின்லாந்து நாடு நல்ல பாடத்திட்டம் வைத்திருந்தும் தற்போதைய தேவைக்கு ஏற்ப +2 முடித்த உடனே வேலைவாய்ப்பு பெற, மாணவர்களைத் தயார் செய்யும் நோக்கத்தோடு பாடத்திட்டத்தை இன்னும் சிறப்பாக மாற்றுகிறார்கள். எவ்வாறு எனில் +2 முடித்த உடன் பீட்ஸா கடையில் வேலை பார்க்க வேண்டும் என்பது மாணவனின் விருப்பம் எனில், பல மொழி கற்றல், பொது மக்களிடம் எவ்வாறு தொடர்பு கொள்ளுதல் என வேலைக்குத் தகுந்தார் போல் அவர்கள் +2 பாடப் பிரிவுகளை தேர்வு செய்து படிக்கலாம் (நம்மூரில் மருத்துவராக +2 வில் உயிரியல் பாடப்பிரிவில் படிப்பது போல). ஆம், வரும் காலம் சேவைத் துறை, மருத்துவம், சுகாதாரம் போன்றவற்றில் வேலைவாய்ப்பு பெருகும் என்பது கணிப்பு.       

எனவே, தற்போது வடிவமைக்கப்படும் மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டம் மாணவர்களுக்குத் தத்தம் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் மற்றும் அடிப்படை அறிவியலை உள்ளடக்கி மேலும் அவர்கள் உயர்கல்வியில் புதுமை செய்ய ஏதுவாகவும் அமையப் பெற வேண்டும். பாடத்திட்டம் வடிவமைப்பதில் உள்ள இடர்பாடுகளை விட நவீன மற்றும் அடிப்படை அறிவியலை பலதரப்பட்ட மாணவர்களுக்கு விளங்க வைப்பதில் தான் சாவல்கள் நிறைந்துள்ளது. இதற்கு சில பள்ளிக் கூடங்களில் இருக்கும் திறமையான ஆசிரியர்கள் மட்டும் தீர்வாகாது. அதே  நேரத்தில் நாடு முழுவதும் திறமையான ஆசிரியர்களை உருவாக்குவதும் கடினம்.   

தற்போது உள்ள பாடத்திட்டம்


பொறியியல், மருத்துவம் மற்றும் இதர படிப்புகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் இதுவரை சேர்க்கை நடைப் பெற்றதால், மாணவர்கள் அதிக மதிப்பெண் எளிதாக எடுக்க வேண்டும் என்பதனை மட்டும் கவனத்தில் கொண்டு முக்கிய வார்த்தைகள் அடங்கிய தொகுப்பாக அதாவது காவிரி ஆறு கடைமடையில் வாய்க்காலாய் மாறுவது போல் சுருங்கிய புத்தகமாய் வடிவமைக்க பட்டிருந்தது. அடுத்டுத்த வரிகளுக்கு தொடரில்ல, தெளிவில்ல படங்கள்; மேலும் எளிமைப்படுத்த முற்பட்டு வினா விடை அடங்கிய புத்தகத்தை கொடுத்து அதிலிருந்த கேள்விகளை வரி மாறமால் பரிட்சையில் கேட்பது என மணப்பாடம் செய்து மதிப்பெண் பெறுவதற்கான அத்துனை வழிமுறைகளுடன் மிகத் தெளிவாக அமைக்கப்பட்ட பாடத்திட்டம்.

மேநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மேன் மேலும் தங்கள் துறையில் தங்களை விரிவுபடுத்திக்கொள்ள எந்த ஒரு சிறந்த பயிற்சியும் இல்லை. புத்தாக்க பயிற்சி என்பது டீ மற்றும் வடையுடன் கூடிய மற்றுமொரு பயிற்சி எனலாம். ஆசிரியர்கள் கடிவாளம் போட்ட குதிரையாய் தன் பாடத்தில் திறமை பெற்றிருந்தாலும் மாணவர்களுக்கு விளங்கும் வகையில் இயற்கையோடும், அன்றாட வாழ்வின் பயன்பாடுகளுன் தொடர்புப் படுத்தி வகுப்பு எடுக்கும் தேர்ந்த ஆசிரியர்கள் சிலரேஆசிரியர்களின் இதர பணிச்சுமைகளினால் முழு ஈடு பாட்டோடு பாடம் எடுக்க முடிவதில்லை என்பதும் மறுப்பதற்கில்லை.
           
பாடங்களை எளிதாக விளங்க வைக்க அரசு பல முயற்சிகளை செலவினம் அதிகமானாலும் எடுத்துக் கொண்டு வருகிறது. நுட்ப வசதிகள் கொண்ட வகுப்பறைகள், வினா விடை அடங்கிய தொகுப்புகள், போட்டித் தேர்வுகள் மூலம் ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது, தகுதி தேர்வுகள், புத்தாக்க பயிற்சிகள் என்பவையாகும். ஆனால், நல்ல பாடத்திட்டத்தை வழங்காமல், பிரச்சனைகளின் மீது பணத்தை மட்டும் வீசி எறிவது ஒரு போதும் பிரச்சனைக்கு தீர்வாகாது

அறிவுப் பெட்டியில் பாடம் எவ்வாறு நடத்த வேண்டும் என விளக்கம் கொடுங்கள்

நாடு முழுவதும் சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது கடினம் எனினும் ஒரு தேர்ந்த ஆசிரியர் எவ்வாறு பாடம் எடுப்பாரோ அதனை அப்படியே பாடத்திட்டத்தில் கொடுத்துவிட்டால் ஒவ்வொரு மாணவனின் கையிலும் புத்தக வடிவில்  சிறந்த ஆசிரியர் இருப்பார். 
  
ஒவ்வொரு பாடத்தின் ஆரம்பத்திலும் பாடத்தை ஆர்வத்துடன் படிக்க உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு முன்னுரை கொடுக்கப்பட வேண்டும். இது அன்றாட வாழ்வில் பயன்கள், பாடம் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது, அதன் வெவ்வேறு பயன்பாடுகள், அப்பாடத்திற்குப் பின்னால் உள்ள ஆச்சரியமூட்டும் கண்டுபிடிப்புகள், அவை உருவான விதம் என ஏதோ ஒரு வகையில் அமையப் பெறலாம்.

மாணவர்கள் சில பாடங்களை மட்டும் நன்றாகப் படிப்பதற்கு தனிப்பட்ட ஆர்வம் என்றிருந்தாலும் குறிப்பிட்ட ஆசிரியர் அந்தப் பாடங்களை நன்றாக நடத்தும் திறமை படைத்தவராக இருப்பார் என்பதனை சில பள்ளிக்கூடங்களில் கவனிக்க முடியும். சிறந்த ஆசிரியர்கள் பள்ளிக் கூடங்களின் மதிப்பு மிக்க சொத்து. ஏனோ தேர்வு வாரியம் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்தும் சிதறிய சர்க்கரை துண்டுகளை தின்ற சிற்றரும்பாய் திருப்தி அடைவதும், சவுகரியத்திற்காக வாங்கிய தொலைப்பேசி தன் நேரத்தை விழுங்கும் போது சொவுகரித்தையே குறை சொல்லும் மனிதர்களாய், சரிவர பாடம் எடுப்பதுவே பெரும் சவாலாக இன்னும் சிலர் வகுப்பு எடுப்பதையே சவாலாக கருதும் அளவிற்கு அரசு எந்திரம் அவர்களை பழக்கி வைத்துள்ளது. சிறப்பாக பாடம் நடத்துவது தனிப்பட்ட ஆசிரியரின் முயற்சி எனினும் பாடப்புத்தகத்தை சரியாக வடிவமைத்தால் பாடப்புத்தகம் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியராக மாறிவிடும். அதாவது ஒவ்வொரு வகுப்பையும் எவ்வாறு  நடத்த வேண்டும், தன் சுற்றத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பாடங்களை எவ்வாறு விளக்க வேண்டும் என்பதனை ஒரு சிறிய குறிப்பாக (அறிவுப் பெட்டி, Smart Box) ஒவ்வொரு பாட உட்தலைப்பிற்கும் கொடுக்க பட வேண்டும். உதாரணமாக, இயற்பியலில் தனி ஊசல் பற்றி பாடம் எடுக்கும் போது தொட்டில் எவ்வாறு செயல்படுகிறது, ஏன் தொட்டிலை ஆட்டும் போது குழந்தை எளிதாக உறங்குகிறது, ஏன் குறிப்பிட்ட இடைவெளியில் சீரக ஆட்ட வேண்டும் என்பதனை விளக்கினால் போதும். மாணவர்கள் harmonic motion, damping என்பவைகளை மிக எளிதாக புரிந்து கொள்வார்கள். படத்தில் நீங்கள் பார்ப்பது அமெரிக்காவின் எம்.ஐ.டி பேராசிரியர் Walter Lewin எவ்வாறு தனிஊசலை நடத்துகிறார் என்பதை விளக்கும் படம்

M.Sc, B.Ed படித்த ஆசிரியர்களுக்கு புத்தகம் எவ்வாறு பாடம் நடத்த வேண்டும் என சொல்லிக் கொடுக்க வேண்டுமா எனக் கேட்டால் NEET, IIT போன்ற நுழைவுத் தேர்வுகளில் நம் மாணவர்களின் பங்களிப்பு தான் என்னிடம் பதிலாக உள்ளது. அறிவுப்பெட்டியில் உள்ள விளக்கங்களை விட இன்னும் சிறப்பாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பாடம் நடத்துவது அவரவரின் தனிப்பட்ட திறமை. ஆனால் பாடத்திட்டம் பலதரப்பட்ட மாணவர்களுக்கும் அடிப்படை அறிவை /புரிதலை சென்றடைய வழிவகை செய்ய வேண்டும். ஆறு மாதத்திற்கு ஓர் அனுபவமில்ல ஆசிரியர் என பள்ளிக் கூடம் நடத்தும் தனியார் பள்ளி குழந்தைகளின் நிலமையை ஒரு கணம் மனதில் நினைத்து பாருங்கள். நல்ல ஆசிரியர் இல்லாக் குழந்தைகளின் மன உளைச்சல் புரியும்.    

குழந்தை பெற்றோர்களின் செல்வம். அச்செல்வத்தை உங்களிடம் ஒப்படைத்த காரணத்திற்காக அவர்களை பரிசோதனைக்கூட எலிகளாக பாவித்து உங்கள் பாடத்திட்டத்தை வைத்து பரிசோதனை செய்யாதீர்கள். அவர்கள் களிமண் எனில் வேண்டிய வடிவத்திற்கு நல்ல சிற்பமாக செய்யுங்கள். மாணவர்கள் ஆசிரியர்களை பிரதிபளிப்பவர்கள். நல்ல பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கொடுங்கள். தயவு செய்து கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்.