30 August 2015

I வெற்றிகரமான பி.எச்.டி க்கு 10 வழிகள், I 10 Tips for Successful PhD

1930 க்கு பிறகு அறிவியலுக்கான நோபல் பரிசு இந்தியாவிற்கு கிடைக்கவில்லை என்பது கல்வியாளர்களுக்கிடையே உள்ள ஆதங்கம். இதில், கல்வி பயிற்றுவிக்கும் முறை, அரசியல் உள்ளீடு, கலாசாரம், உணவு, பெற்றோரின் வளர்ப்பு முறை என பல காரணங்கள் இருந்தாலும், ஆராய்ச்சிகள் இவைகளுக்கு அப்பாற்பட்டு இந்தியாவை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக அறிவியலில் முன்னிறுத்துவது இன்றியமையாதது. இத்தருணத்தில், இங்கு ஆராய்ச்சிகள் அதன் முழுமைத்தன்மையுடன் நடைபெறுகிறதா என ஒரு கணம் யோசிக்கவும் வேண்டியுள்ளது. இப்பதிவில், பி.எச்.டி பட்டறையில் வெற்றிகரமான ஆராய்ச்சியாளராக வெளிவருவதற்கான 10 வழிவகைகளை தொகுத்துள்ளேன்.
1. மாறுங்கள் வேறு பல்கலைக்கழகத்திற்கு
முதுகலை பல்கலைக்கழகத்திலே உங்கள் பி.எச்.டி தொடர ஆர்வமாக இருக்க, உங்களது தனிபட்ட மற்றும் தொழில்முறை தொடர்பு, பரிட்சயமான பல்கலைக்கழக நடவடிக்கைகள், மற்ற துறையூடனா ஆராய்ச்சி தொடர்புகள், எதிர்வரும் ஆராய்ச்சி திட்டத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் என பல காரணங்கள் இருக்கலாம். எனினும், இந்தியாவில் வேறு பல்கலைக்கழகத்தில் அல்லது வேறு நாட்டில் பி.எச்.டி தொடரும் போது ஆராய்ச்சி பற்றிய கண்ணோட்டங்கள் மாறும். உங்களது அறிவுசார் எல்லை விரிவடையும். புதிய கல்வி சூழல் புது வகை அனுபவத்தை ஏற்படுத்தும். கல்வியியல் தொடர்புகள் அதிகமாகும்.
2. உதவிதொகையுடன் தொடருங்கள்
பணத்தின் தேவை பிறந்த உடனே ஆரம்பித்து விடுகிறது. அதன் வலிமையை, ஏற்படுத்தும் வலியை உணர்ந்து இருப்பீர்கள். 22 வயதில் பி.எச்.டி சேரும்போது சமுதாயத்திற்கோ, வீட்டிற்கோ உங்கள் சம்பாதித்தியம் அவ்வளவாக தேவைபடாது. ஆனால், ஒப்பீடு தேவையில்லை எனினும் காலம் செல்ல செல்ல உங்களை ஒத்த வயதினை உடையோர் ஈட்டும் வருமானம், கஷ்டங்கள் உங்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக தேவையில்லாத அழுத்தத்தை கொடுக்கும். குறைந்தது ஒரு வருடம் ஆகியும் உதவி தொகை இல்லை எனில் உங்கள் மீதான சனி கோளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
மனதில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் ஒரு மலிவான வேலைக்காரர் இல்லை என்பதை. மேலும், பல்கலைக்கழகம் கொடுக்கவில்லை என்பது, உங்களை கவனிக்கவும் இல்லை என்பதாகிறது. இந்த பூகோளத்தில் நீங்கள் செய்யும் அதே வேலைக்கு மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் உதவிதொகையும் பெறுகிறார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
3. சரியான வழிகாட்டியை (Supervisor) தேர்ந்தெடுங்கள்
சரியான கால அளவில் பி.எச்.டி யை முடித்து கொடுப்பவரா?, தரமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுபவரா?, ஆய்வுக்கட்டுரையில் உங்களுக்கான இடத்தை தருபவரா?, முன்னால் மாணவர்களின் கட்டுரைகள் தரத்திலும் எண்ணிக்கையிலும் அதிகமா?, உங்கள் தேவைகளுக்கு செவிசாய்ப்பவரா?, ஆய்வுக்கான நிதியை ஏற்படுத்தி தருபவரா?, முன்னால் மாணவர்கள் நல்ல வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளார்களா?, ஆராய்ச்சியில் புகழ்பெற்று இருப்பின் உங்களுக்காக நேரம் ஒதுக்குபவரா, கல்விகலாச்சார வட்டத்தில் பங்களிப்பு அதிகமா?, மேற்குரியவை உங்கள் வழிகாட்டிக்கு உள்ளதெனில் நீங்கள் கண்டிப்பாக ஆராய்ச்சியை தொடரலாம்.
மேலும், சிலர் தரமான கட்டுரைகளை வழங்கினாலும், சக ஆராய்சியாளர்களுடன் சரியான தொடர்பு, பழக்கவழக்கங்களில் தொய்ந்தவராக இருந்தால் நீங்கள் மேலும் சற்று யோசித்து முடிவெடுங்கள். மனைவி மட்டுமல்ல நல்ல வழிகாட்டி அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான். ஆனால், நல்ல வரம் கிடைப்பதற்கு நீங்கள் முயர்ச்சிக்கவும் வேண்டும்.
4. உங்கள் கையை பிடித்து வழிகாட்ட வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்  
வழிகாட்டி உங்களுக்கான பாதையை மட்டுமே காட்டுவார். அடுத்தெடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அது நீங்கள் அடுத்து பங்குகொள்ள வேண்டிய கருத்தரங்கு, படிக்க வேண்டிய கட்டுரைகள் (அ) புத்தகங்கள், முடிக்க வேண்டிய வேலை மற்றும் காலம், ஏற்படுத்த வேண்டிய ஆராய்ச்சி தொடர்புகள், என அனைத்திற்கும் பொருந்தும். உங்கள் அறிவை வளர்த்து கொள்வதற்கு நீங்கள் தான் முழுபொறுப்பு. கரும்பலகையில் உங்களுக்கு பாடம் நடத்த வழிகாட்டிக்கு நேரம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அனைத்தையும் எதிர்பார்த்து உங்களை குழந்தையாக பாவித்து கொள்ளாதீர்கள்.
5. ஆய்வறிக்கை (Thesis) தயாரிப்பதிலும் கவனமாக இருங்கள்
ஆராய்ச்சி மற்றும் கல்வியியல் நிர்வாகத்தை கற்று கொடுக்கும் தளமாக பி.எச்.டி இருக்கும். எனினும் ஆய்வறிக்கை தயாரிப்பதிலையே கவனமாக இருங்கள். இதற்கு கால எல்லை உண்டு. ஆய்வறிக்கை தயாரிப்பது, கட்டுரைகள் வெளியிடுவதை தவிர வேறு என்ன வேலை இருக்க முடியும் என்ற எண்ணம், பி.எச்.டி சேர்ந்த பிறகு நிறம் மாறும். எனவே, கருந்தரங்கு நடத்துவதில் பங்கு கொள்வது, முதுகலை மாணவர்களுக்கு வழிகட்டுவது, துறை சார்ந்த விழாக்களில் ஈடுபடுவது என பல கடமைகள் இருந்தாலும் இவை CV பக்கத்தை அதிகபடுத்துமே தவிர ஆய்வறிக்கைக்கு உதவாது என்பதில் கவனம் கொள்ளுங்கள்.

(தொடரும்.......)

22 August 2015

கேளுங்கள் பல வழிகளில், நல்ல கேள்விகளை, Ask Good Question in Different Ways

ஒரு கருத்தை பற்றிய பல விதமான கேள்விகளுக்கு பதில் அளிப்பது, போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வழிவகுத்தாலும், பாடத்தை எந்த அளவு புரிந்து கொண்டிருப்பீர்கள் என்பது கேள்விக்குறியே! பதில் அளிக்கும் திறமைக்கு மேல் கேள்வி கேற்கும் திறன் இருக்க, பாடத்தில் முதன்மை அடைய வாய்ப்புகள் அதிகம்.
கேள்வி கேட்கும் திறன், அம்மா தனது மழலையிடம் பள்ளியில் என்ன படித்தாய் என்பதை விட, என்ன கேட்டாய் என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது.
தயவு செய்து வழக்கமான வீட்டு பாட முறைகளை மாற்றி (100 times imposition, copy the text book answer three times) புத்தகத்தில் உள்ள கேள்விகளை தவிர, வேறு கேள்விகள் கேட்டு அதற்கு சாத்தியமான பதில் தருதல், புரிந்து கொண்ட பாடத்தை வரைபடம் மூலம் விளக்கம் செய்தல், கேள்விக்கான பதிலை கொடுத்து, அதை மாணவனை மதிப்பிட செய்ய சொல்லி அதன் மூலம் மாணவனை மதிப்பிடுதல் போன்றவைகளை செய்து மாணவனின் ஆக்கதிறனை வளர்க்கலாம்.
இதனால், நல்லா நாளு கேள்வியையும் கேட்கலாம்!